வியாழன், 10 ஜூன், 2010

#26 நரசிம்ம பல்லவனின் - புஷ்ப்பத்தூர் போர்

வரலாற்று புனைவு தான் இது:-
சென்ற இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாற்று புகழ்மிக்க நரசிம்ம பல்லவன் - புஷ்பத்தூர் மகாராணி போரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்த்ரி கீழ் கண்டவாறு பதிவு செய்கிறார்.
ஆரிய வழியில் வந்த நரசிம்ம பல்லவன், " உலகத்தவர் எல்லாம் உறவினர்கள்" என்ற கொள்கையை  சொல்லி ஒரு சிற்றூரை  ஆண்டு வந்தான். ஒரு நாள் விதி வாய்விட்டு சிரிக்க, தன் ஆட்சியைப்பற்றி ஒரு நூலை அரங்கேற்றினான்.
அடுத்த ஊரான மயூரா புரியை ஆண்ட விஜய தேவி என்ற அரசி போட்டிக்கு, பல்லவனின் நூலை கிண்டல் செய்யும் தொனியில் தான் ஒரு நூலை எழுதி அரங்கேற்றினாள். நூல் அரங்கேற்றத்திற்கு , மயூராபுரியின் நட்பு நாடுகளை சேர்ந்த பற்பல அரசர்களும் அரசிகளும் வந்து விழாவை சிறப்பித்தனர். அக்காலத்தில் இதற்கு " கும்மியடித்தல் " என்ற சொல் வழக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. வந்து இருந்து விழாவை சிறப்பித்தவர்களில் , புஷ்பத்தூரை ஆண்ட, சந்தனா தேவி குறிப்பிட தக்கவர். சந்தனா தேவி, புஷ்பத்தூரை, திறம்பட ஆண்டு வந்த அரசி என்பதும், இவருக்கும் நரசிம்ம பல்லவனுக்கும் முன்பே, எரிச்சல், கடுப்பு இன்னபிற , உபாதைகளும் இருந்து வந்தன என்பதும், வரலாறு பகரும் உண்மைகள். மயூராபுரியின் நூல் அரங்கேற்ற விழா நரசிம்ம பல்லவனை கடும் கோபம் கொள்ள வைத்தது. தன் மீசை துடி துடிக்க, முகம் சிவக்க , மன்னன் வீறு கொண்டு எழுந்து, எழுத்தை எழுத்தால் வெல்ல விழைந்தான். " புஷ்பவல்லி" என்ற ஒரு நூலை அவசரமாக அவசரமாக எழுதி தன் அவையில் அரங்கேற்றினான். இந்த புஷ்பவல்லி என்ற நூல், மன்னனின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிடினும், எதிரி நாட்டு ராணியை தாக்குவது போல் இருந்ததால் , மன்னனின் நட்பு நாடு களின் வேந்தர்களும், சிற்றரசர்களும் , உள்நாட்டு விதூஷர்களும் பெரும் திரளாக வந்து இந்த அரங்கேற்றத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள்." புஷ்ப வல்லி" ஒரு தரம் தாழ்ந்த குப்பை என்று வரலாற்று ஆசிரியர்களும், இலக்கிய வாதிகளும், குறிப்பிடு கின்றனர். நரசிம்ம பல்லவன் , இப்படி ஒரு குப்பையை எழுதியதற்கு, ஆத்திரம் கண்ணை மறைத்ததும், கூட இருந்து ஏற்றி விட்ட ஆலோசகர்களும் தான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி கருத்து உரைக்கின்றார்.
நரசிம்ம பல்லவனின் " புஷ்பவல்லி" , பெரும் போருக்கு காரணமானது. ட்ரோஜன் போருக்கு ஆப்பிள் பழம் காரண மானது போல், நரசிம்ம பல்லவன் போருக்கு இந்த நூல் காரணமானது என்கிறது வரலாறு.
புஷ்பத்தூரின்  அண்டை நாடான, 'கேள்வி' நாட்டு மன்னனுக்கு, இந்த அரசியலை பார்த்து தன் தோள்கள் தினவெடுத்தன. " என்ன ஒரு அரசிக்கு எதிராக ஒரு அரசன் நூல் எழுதினானா? இதை மற்ற அரசர்களும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களா? என்னே ஆணாதிக்கம் என்னே ஆரிய ஆதிக்கம் , என்னே அராஜகம் இன்னும் பல என்னேக்களை சேர்த்து மிக்க கோபம் கொண்டான். நாமிருக்க, ஆரிய நரசிம்மன் , திராவிட அரசியை கிண்டல் செய்து நூல் இயற்றுவதா? அதை மற்றோர் ரசித்து இருப்பதா?. நரசிம்ம பல்லவன் கோஷ்டி யில் உள்ள அனைவர் மேலும் 'கேள்வி' நாட்டு மன்னன்  தீரா கோபம் கொண்டான்.மன்னர்கள் பலரும் தத்தம் வாட்களை உயர்திப்பிடித்தனர். 'வலைகுடாவை' போர் மேகங்கள் சூழ்ந்தன. கேள்விநாடு மன்னன் தலைமையில் ஒரு கோஷ்டி நரசிம்ம பல்லவன் தலைமையில் ஒரு கோஷ்டி என்று இரண்டு படைகளும் மோதின. இதில் நரசிம்ம பல்லவனின் நண்பன் 'பைத்தியக்கரத்தனமாக' எதிரியிடம் போய் சேர்ந்தான் என்றும் இந்த உள்குத்து போரின் ஒரு காரணம் என்றும் வரலாறு பேசுகிறது. எது எப்படியோ, பட்டாக்கத்தியை வேகமாக உருவிய நரசிம்ம பல்லவன், சரேலென்று ஜகா வாங்கி, ஸாரி என்று மடிந்து விட்டான். லேசில் தோற்காத மன்னன் பின் வாங்கியதன் காரணம் வரலாற்று அறிஞர் களின் யூகத்திற்கு எட்டாததாகவே உள்ளது.
தற்செயலாக ஆரம்பித்த இந்த போர், ஆரிய திராவிட போராக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதால் மன்னன் பின் வாங்கினான் என்றும்; இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல பல்லவன், தான் புனைந்த நூல் பலராலும் இழிந்துரைக்க பட்டதால் மனம் நொந்து , மன்னன் கிரீடத்தை துறந்து, போரை புறக்கணித்தான் என்றும் கூறுவர். மன்னன் பின் வாங்கியதை அசோகரின் மன மாற்றத்திற்கு ஒப்பிட்டும் சிலர் பேசுகின்றனர். பேஷண்டே போய் சேர்ந்த பிறகு மருந்து வாங்கி வரும் நபரைப்போல் ' பாண்டு' மன்னரும் மற்றோரும் 'கலகல' வென்று சல சலப்பதை பார்த்த மக்கள் ஆர்வத்துடன் கேட்கும் கேள்வி" 'பல்லவ மன்னர் மீண்டும் ஆட்சி அமைப்பரா? பகைமையை மறந்து மீண்டும் 'வலைகுடாவில்' வசந்தம் வீசுமா?; பிரிவினைகள் மனங்களை விட்டு மறையுமா?".
வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி நீண்ட இக்கேள்விகளை  முன் வைக்கிறார்.

5 கருத்துகள்:

 1. உங்கள் பதிவில் உள்குத்து இருக்கோ ? அனாலும் இந்த வரலாற்றை ஆராய நினைக்குறேன் நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க... சுவாரஸ்யமா இருக்கு....

  பதிலளிநீக்கு
 3. அன்பு கார்த்திக், அண்ணாமலையான்.
  யாருக்காக ஆத்தறோம் என்று தெரியாமல் டீ ஆத்திக்கொண்டு இருந்த என் கடைக்கு வந்த நண்பர்களே வருகைக்கு நன்றி; அடிக்கடி வருக.

  பதிலளிநீக்கு