வியாழன், 27 மே, 2010

#22 ஹைரோப்பா [லண்டன் பார்க்கலாமா? ]

நான் முன்பே சொல்லியிருந்தபடி , என்னுடைய வகுப்புகளை தவிர்த்துவிட்டு ஊர் சுற்றிப்பார்த்ததை இப்போது பார்ப்போம்.
அடுத்த நாள் காலை 'வெள்ளைக்கார' பிரேக் பாச்டுடன் தொடங்கியது. நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ஏழு மணிக்கு அனைவரும் கூடினோம். பிரட், பிஸ்கட், ஜாம், கார்ன் பிளேக்ஸ், பால், இவற்றுடன் , அப்பளம் போன்ற மாமிச துண்டுகள். நமக்கு எதைப்பார்த்தாலும் அசைவமாகவே தெரிகின்றது. தக்காளி முதல் மாம்பழம் வரை எல்லாமே மாமிசத்தை நறுக்கி வைத்தது போல் தெரிகிறது. பிஸ்கட்டில் , பிரட்டில் முட்டை சேர்த்து இருப்பானோ? இரண்டு வாழை பழம் ஒரு கப் காப்பி யுடன் பிரேக் பாஸ்ட் முடிந்தது. இதே தான் அடுத்த பதினைந்து நாட்களுக்கும் பிரேக்பாஸ்ட் என்பது அப்போது தெரியவில்லை
எங்களுடைய மினி பஸ்ஸில் விண்டோ சீட் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். டூர் மேனேஜர் சுனில் என்ற கோவா பையன் தான். இவன் லண்டனிலேயே மூன்று வருஷமாக இருக்கிறானாம். அப்பொழுது தான் என் கமிரா மெமோரி கார்ட் கடைசி மூச்சு விட காத்திரு ப்பது நினைவிற்கு வந்தது. 'ஒரு மெமோரி கார்ட் வாங்க வேண்டும்'. நான் வைத்திருக்கும் அரதப்பழசான காமிராவிற்கு சென்னையிலேயே கார்ட் கிடைக்க வில்லையே, லண்டனில் கிடைக்குமா? எட்டுமணிக்கு பஸ் கிளம்பியது. லண்டன் ஒண்ணும் சுவர்க்கம் போலெல்லாம் இல்லை. நம்ப கூடுவாஞ்சேரி , வண்டலூர் மாதிரி தான் இருந்தது. என்ன தெருவெல்லாம் முழுக்க தார் போட்டு இருக்கான். வீடெல்லாம் ஒட்டு வீடுதான். ஒரு அரை மணி போனதும்
காட்சிகள் மாறின. இப்போது லண்டன் நகரத்துக்குள் வந்து இருக்கிறோம் , முதலில் பார்த்ததெல்லாம் out skirts என்று தெரிந்தது. மெயின் ரோடுகளை தவிர மற்ற ரோடுகள் எல்லாம் ரொம்ப குறுகல். போதா குறைக்கு கார் களை வேற தெரு ஓரத்தில் பார்க் செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் சுத்தமான ஆர்மேனியன் அங்கப்ப ..[ஜாதி]...தெருக்கள் தான் நினைவிற்கு வந்தன. இப்பொழுது ஒரு பாட்டியம்மாள் எங்களுடன் சேர்ந்து கொண்டாள் அவள் தான் கைடு, பெயர் சூசன். இப்பொழுது லண்டன் guided tour ஆரம்பமாகிறது என்று சொல்லி எங்கள் டூர் மனஜெர் அபீட் ஆனான்.
 பால் கதீட்ரல்
கைடட் டூர் என்பது ஒரு உலக மகா பிராட் என்பது புரிய ஆரம்பித்தது. சூசன் தெருபெரெல்லாம் சொல்லிக்கொண்டே  வந்தாள் பஸ் எங்கும் நிற்காமல் போய்கொண்டே இருந்தது. இடது பக்கம் பாருங்கள் பிகாடில்லி சர்கஸ், வலது பக்கம் இந்தியன் ஹௌஸ் நாம் திரும்பிபாற்பதர்க்குள் பஸ் அடுத்த இடத்திற்குப்போய் விடுகிறது. ஏதாவது ஒரு இடத்தை போட்டோ பிடிக்கலாம் என்று பார்த்தால் உடன் வரும் மக்கள் ஜன்னலை மொய்த்து கொண்டு விடுகிறார்கள். நமக்கு அவர்களது அழகான தலைகள் தான் தெரிகின்றன.
இப்படியே ஒப்பேத்திக்கொண்டு ஒரு இடத்துக்கு வந்தோம். இங்கு இடது பக்கம் இருப்பது தான் லக்ஷ்மி மிட்டல் வீடு என்று சொன்னாள் சூசன். நிறைவாக இருந்தது. நம்மூரக்காரன் இந்த ஊரில் வந்து பெரிய லெவலில் வாழ்வது நன்றாக இருந்தாலும், இந்த ஆள் நாம் ஊர்காக பெரிசா ஒண்ணும் பண்ணலையே, நாம் தான் இவனை சொந்தம் கொண்டாடுகிறோமோ என்று தோன்றியது.
லண்டனில் உள்ள ஒரு பெரிய சர்ச்க்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கே போட்டோ பிடித்துக்கொண்டோம். அங்குள்ள பாத்ரூம் பைசா போட்டால்தான் திறக்கிறது (ஏறக்குறைய 30 ரூபாய்) டூர் மானேஜர், நாம் அடுத்தது போகப்போகும் பக்கிகாம் அரண்மனையில் ப்ரீ பாத்ரூம் வசதி இருக்கும் என்று ஆறுதல் சொன்னான்.

பிக்கடில்லி சர்கஸ்


பக்கிங் ஹாம் அரண்மனை

     அடுத்தது நாம் போனது பக்கிங் ஹாம் அரண்மனை. பக்கிங் ஹாம்  அரண்மனை விசிட் ஒரு பெரிய ஏமாற்றம் . நம்மை அனுமதிப்பது ஒரு பெரிய மூடப்பட்ட கேட்டைப்பார்க்கத்தான். அதன் வாசலில் சில சிவப்பு டிரஸ் போட்ட குதிரை வீரர்கள். அரண்மனையின் மூடப்பட்ட கதவை தரிசித்துவிட்டு போட்டோக்களை வீறு பிடித்துக்கொண்டு வந்தோம். இது ராஜ விசுவாசமா அடிமை தனமா என்று புரியவில்லை.(நானும் போட்டோ எடுத்துக்கொண்டது வேறு விஷயம்)
டவர் ஆப் லண்டன்  என்று ஒரு இடம் இருக்கிறது. தேம்ஸ் நதி  கரையில் அமைந்த இந்த இடம் இப்போது பொருட்காட்சியகமாக இருக்கிறது. எல்லா இடத்திலும் பெரிய கியூ. டூர் மானேஜர் சொன்ன படி நம்மூர் கோஹினூர் வைரம் வைக்கப்பட்டிருந்த jewelHouse   பார்வையிட கியூவில் நின்றேன். அங்கேயும் நம்மூர் வாசிகள் சினிமா தியேட்டர் கியூவில் போல 'பூந்து' போவதை பார்க்க முடிந்தது. ஓரிடத்தில் நிறைய கிரீடங்களை கண்ணாடி ப்பெட்டிகளில் வைத்து இருக்கிறார்கள். இவை  ராஜாக்களும் ராணிகளும் அணிந்த கிரீடம்களாம் இதில் ஒன்றில்தான் நம்மூர் கோஹினூர் வைரம் பதித்து இருக்கிறது. இங்கு தானே நகரும் கன்வேயர் பெல்டில் நாம் நின்றால் நம்மை நகர்த்தி எல்லா கிரீடங்களையும் பார்க்கும்படி செய்கிறது. கோஹினூர் நிஜமாலுமே பெரிய பாக்கு சைஸ் இருக்கிறது. " இந்த கோஹினூர் இங்க வந்தபோது இந்தியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீ லங்கா  எல்லாம் சேர்ந்து இருந்தது. இப்போது யாரிடம் திருப்பிக்கொடுப்பது. இதனால்தான் இதை நாங்களே வைத்துக்கொண்டு இருக்கிறோம். என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்தாள்" சூசன்.

......இன்னும் பார்க்கலாம்

# 21 ஜாதி பெயரா அப்பா பெயரா

தமிழ் நாட்டில் ஜாதி என்பதே ஒரு கெட்ட வார்த்தை ஆகிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே.
"ராஜ்" என்று ஒரு பெயரை  கேட்ட உடன் நமக்கு மனதில் உண்டாகும் உருவத்திற்கும், "ராஜ் ஜெயின்" என்று கேட்டால் உண்டாகும் உருவத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும். மன்மோகன் சிங் க்கும் மன்மோகன் என்ற பெயரை கேட்டவுடன் தோன்றும் உருவத்துக்கும் நிறைய வேறு பாடு இருக்கும். ஒரு பெயரை வைத்து அந்த நபரை அறிய உதவும் சாதனம் தான் ஜாதி பெயரும், ஊர் பெயரும். மதுரைக் காரன் என்றாலே இழுத்து இழுத்து பேசும் பாணியும் , முதுகுக்குப்பின் அருவாளும் தோன்றும்.
இந்தவேறு பாடுகளை எல்லாம் அறியவைக்கும் ஊர் பெயரையும் ஜாதி பெயரையும் மறைப்பது தான் போன தலை முறை நமக்கு கற்றுத்தந்த பாடம். ஜாதி களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று தெருக்களின் பெயர்களை மாற்றிய கூத்து தமிழ் நாடு தவிர வேறு எந்த ஊரிலும் நடந்து இருக்க முடியாது . "டாக்டர் நாயர் ரோடு" வெறும் "டாக்டர் ரோடு" ஆன கேலிக்கூத்து சென்னைக்கு மட்டுமே உரியது. நல்லவேளை "நாயுடு பேட்டை" வெறும் பேட்டை ஆகவில்லை.
ஜாதி மக்கள் மனதையும் அரசியலையும் விட்டுப்போகாத வரை ஜாதி ஒழிப்பு என்பதே ஒரு கண்துடைப்புதான். ஜாதி ஒழிப்பைப்பற்றி வாய்கிழிய பேசுபவர்கள்தான் ஜாதிவாரி கணக்குஎடுப்பு வேண்டும் என்பது பெரிய காமெடி. எனக்கு ரொம்பநாளாக ஒரு கேள்வி. ஜாதி ஒழிப்பை பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் யாராவது ஒரு குறத்தியை தன வீட்டு மருமகளாக கட்டியிருக்கிறார்களா? கட்டுவார்கள?. பின் எங்கே போனது இவர்களின் ஜாதி ஒழிப்பு கொள்கைகளும் வெங்காயமும். ஸாரி! எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.
அனேகமாக தமிழ் நாட்டை தவிர மற்ற அனைவரும் "sur name" என்று ஒன்று வைத்துக்கொள்கிறார்கள். இது ஜாதி, clan போன்றவை ஆகும். மலையாளத்து காரர்கள் மனை பெயரை வைத்து கொள்வார்கள். அந்த வீட்டு அனைவரும் அந்த மனை பெயரால்  அறியப்படுவார்கள். நம்மூருக்கு வருவோம். நல்லதோ கேட்டதோ ஜாதியை நாம் சொல்லிக்கொள்ள வெட்கபடுவதால், இந்த "surname" கட்டத்தை எப்படி fill செய்வது என்று தெரியாமல் இனிஷியலை expand செய்து  அப்பா பெயரை பொட்டுகொள்கிறோம். எனவே அப்பாவின் பெயர் secondname அல்லது surname ஆக அமைகிறது. தமிழனைத்தவிர மற்ற அனைவரும் மற்றவரை ( மிகவும் நெருங்கிய வராக இருந்தால் ஒழிய) surname சொல்லித்தான் குறிப்பிடுவார்கள். இந்த நடை முறையினால் அப்பாவின் பெயர் மகன் பெயர் ஆகிறது. முன்னாள் மந்திரி அன்புமணியின் பெயரை ராமதாஸ் என்று தான் பல வடநாட்டு ஊடகங்கள குறிப்பிட்டன. இரண்டாவது சொல்லப்படுவது அவருடைய அப்பாவின் பெயர் அது அவரின் பெயரின் ஒரு பகுதியல்ல என்பதையே அவை புரிந்துகொள்ளவில்லை. அடுத்த பெயர் தயாநிதி மாறன். இவரையும் மாறன் என்றே குறிப்பிடுகின்றன. மாறன் என்பது ஜாதி பெயரோ, குடும்ப பெயரோ அல்ல அது இவரின் அப்பாவின் பெயர் என்பது மறக்க படுகிறது. நான் கொஞ்சகாலம் டில்லியில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தபோது என் நண்பர் கேட்டார், " நம் ஆபீஸ் லக்ஷ்மி யும் ஜனாதி பதியும் ஒரே ஜாதியா" என்று. இதற்கு காரணம் எங்கள் டைபிஸ்ட் பெயர் லக்ஷ்மி வெங்கட்ராமன் , அப்போதைய ஜனாதி பெயரும் வெங்கட்ராமன். இரண்டு பேரின் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இன்னும் ஒரு குழப்பம் அப்பாவின் பெயரை தன பெயரின் முன் வைத்துக்கொள்வதா அல்லது பின் வைத்துக்கொள்வதா என்று. எனக்குதெரிந்த ஸ்டையிலான பையனின் பெயர் ராஜேஷ் முனுஸ்வாமி இதில் பையன் பெயர் ராஜேஷ் என்று எண்ணி ஏமாந்தவர்கள் அநேகம். பையன் முனுஸ்வாமி, அப்பாவின் பெயர்தான் ஸ்டைலான ராஜேஷ். இனிஷியலை expand பண்ணி மாட்டிக்கொள்ளாத சில புத்திசாலிகளும் உண்டு. TR பாலு , P சிதம்பரம், மு க அழகிரி போன்றோர். இன்னும் சிலர் இந்த surname கூத்தால் , தன பெயரை இழந்து ஊரின் பெயரால் அழைக்கபடுபவர்களும் உண்டு. ராமசாமி ஆற்காடு முதலியார் என்பவர் , R ஆற்காடு என்றே கடைசி வரை அறியப்பட்டார்.
ஜாதியின் பெயர் (இந்த பிரயோகம் பிடிக்க வில்லையென்றால்) இனத்தின் பெயர் அந்த இனத்தின் வளர்ச்சியே குறிக்கிறது. பறவைகளை பொறுத்த வரை அவை தங்கள் தாயை மட்டும் தான் அறியும். அதுவும் சில நாட்கள், மாதங்கள் தான். இது முதல் நிலை. சில மிருகங்கள் தங்கள் உடன் பிறப்புக்களுடன் சில மாதங்கள், சில ஆண்டுகள் சேர்ந்து இருக்கும். இது அடுத்த , சற்று மேம்பட்ட நிலை. அடுத்த ஊர் மாடுகூட்டதிற்கும் தங்களுக்கும் வேறு பாடு தெரிய துவங்கினால் அது மாடுகளின் அறிவு வளர்ச்சியையே குறிக்கும். நான் சொல்லவருவது என்னவென்றால் , தன் இனம், தன் கூட்டம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்க முயல்வது சமூக நோக்கில் மேம்பாடையே காட்டும். இந்த பிரிவு, பிறப்பை முன் வைத்து இருக்கலாம், படிப்பை முன்வைத்து இருக்கலாம், பலத்தை முன் வைத்து இருக்கலாம், சமூக அந்தஸ்தை முன் வைத்தும், பண பலத்தை முன் வைத்து கூட இருக்கலாம்.
இந்த பிரிவினை. தவிர்க்க முடியாதது. இவை அனைத்தும் ஒழிந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஏற்றத்தாழ்வுகள் ஏதோ ஒரு parameter ல் கட்டயாமாக இருக்கும்.

வியாழன், 13 மே, 2010

# 20 ஹைரோப்பா [2 ] - பயணத்திற்கான preperations .


ஐரோப்பாவில் குளிர் காலம் முடிந்திருந்தாலும், நாங்கள் போகவேண்டிய சுவிசர்லாந்தின் குளிரை நினைத்து கொஞ்சம் உல்லன் டிரஸ் வாங்கவேண்டி இருந்தது. பாஸ்போர்ட் இந்த்யாதிகளை வைக்க பெரிய, ஆழமான பை வைத்த மூன்று பனியன்கள் தைக்க வேண்டி இருந்தது. ஒரு back pack , ஒரு ஹிப் பவுச், சில பல ஜிப் பௌச், MTR ரெடி டு ஈட் சாம்பார் சாதம் , ரசம் சாதம், தக்காளி சாதம் , சிப்ஸ் என்று ஒரு பெரிய பட்டியலே இருந்தது.
இதைதவிர சில அனுபவஸ்தர்கள் சொன்னவாறு ஒரு Universal adopter plug பின், ஒரு பிளாஸ்டிக் ப்ளேட் ஒரு ஸ்பூன் எல்லாம் தயார் பண்ணிக்கொண்டேன்.
பெரிய பை வைத்த பனியன் தைக்க எப்போதோ வாங்கியிருந்த , கட்ட முடியாத ஒரு முரட்டு ராஜஸ்தான் வேட்டி கை கொடுத்தது. அண்ணாநகரில் உள்ள ஜூனூ சேட் கடையில் பேரம் பேசி ஒரு ஜெர்கின் வாங்கினேன். அங்கேயே ஒரு சாக்சும் வாங்கினேன். (கஞ்சத்தனம் பண்ணி சாக்ஸ் வாங்காததற்கு பின்னால் நடு நடுங்கி தீர்க்க வேண்டியிருந்தது).
ஒரு பாடம் என்னெவென்றால் கண்ட கண்ட ப்ளாகை எல்லாம் படித்து பல விஷயங்களைப்பற்றி பயப்பட தேவையில்லை. யாரோ ஒரு புண்ணியவான் எழுதியிருந்தான் " ஜீன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு போனால் பெரிய ஹோட்டலில் எல்லாம் உள்ளே விட மாட்டார்கள்" என்று. காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் போன்ற ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தால் கழுதயைகூட உள்ளே விடுவார்கள் என்று போனபின் தான் தெரிந்தது.
ஐந்தாம் தேதி டில்லி சர்வதேச விமான டெர்மினல் 2 ல் மாலை ஏழு மணிக்குப்போனேன். லோக்கல் பிலேங்களைப்போல் இல்லாமல் செக்-இன் பாகாஜை எல்லாம் ஸ்கேன் பண்ணாமலேயே வாங்கிக்கொண்டார்கள். ஒரே ஒரு shoulder பையுடன் ப்ரீயாக உள்ளே நுழைந்தேன். ரொம்ப பெரிதாக இருந்த லவுஞ்சில் இரண்டு மணி நேரம் சுற்ற வேண்டி இருந்தது. யாரோ சொன்ன அட்வைஸ் படி, அங்கு நின்றிருத்த airtel பெண்ணிடம் 500 ரூபாய்க்கு காலிங் கார்ட் ஒன்று வாங்கிகொண்டேன். life is a game of waiting என்று போர்டிங் அழைப்பிற்கு காத்திருந்தேன்.
                                                  டில்லி ஏர்போர்ட்

ஏர்போர்ட் முழுவதும் பணக்கார வாசனை அடித்தது. அங்கிருந்த குழந்தைகள் முதல் கிழவிகள் வரை புஷ்டியாக இருந்தார்கள். ஒரு வழியாக எமிரேட் ப்ளைட்க்கு போர்டிங் கூப்பிட்டார்கள். ப்ளைட்டில் ஏறும் ஏரோ பிரிட்ஜே மிக பிரமாதமாக இருந்தது. மகாபாவிகள் நடு செண்டர் ரோவில் நடு செண்டர் சீட்டை கொடுத்து தொலைத்திருந்தார்கள். லெப்டில் ஒரு சிங் ரைட்டில் ஒரு மெகா சைஸ் ஹிந்தி தாத்தா. பிளேன் ரைட் டைமில் கிளம்பி பறக்க ஆரம்பித்தது. pant shirt போட்ட air ஹோஸ்டஸ் தலையில் தொப்பி வைத்து , சைடில் சல்லா துணியை தொங்க விட்டு இருந்தது தமாஷாக இருந்தது. லிக்கர் முதலான சமாசாரங்கள் தாராளமாக கொடுத்தார்கள் நமது டின்னர் ஒரு கூல் drink ஒரு பால் கலக்காத காப்பியுடன் முடிந்தது. அர்த்த ராத்திரியில் துபாய் ஏர்போர்டில் இறக்கினார்கள். நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூட்டி வைக்க வேண்டி இருந்தது. அங்கிருந்த ஒரு கடுப்பாண்டி ஷோல்டர் பை யை மட்டும் ஸ்கேன் பண்ணினால் போறாது என்று பெல்ட் ஷூ எல்லாவற்றையும் கழட்டசொல்லி ஸ்கான் பண்ணினான்
கனெக்டிங் ப்ளைடிற்கு இன்னும் எட்டு மணி நேரம் இருந்தது. துபாய் ஏர்போர்ட் மிகப்பெரிய ரங்கநாதன் தெரு போல இருந்தது.

                                                         துபாய் ஏர்போர்ட்   

                                                       நாற்காலியில் சயனம்

 அர்த்த ராத்திரியிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. தூங்கா நகரம் என்று நாம் சொல்லும் மதுரை எல்லாம் ஜுஜுபி. சைடில் போனால் ஏறக்குறைய நம் சென்ட்ரல் ஸ்டேஷனில் போல மக்கள் chair களிலும் தரையிலும் சுருண்டு சுருண்டு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் ஒரு சேரை பிடித்து தூங்க ஆரம்பித்தேன். காலை ஆறு மணிக்கு செல்போன் அலாரம் அடித்தால் எழுந்து நம்முடைய பிளாட்பாரத்தை தேடிசென்றேன். பிளேனில் இதை கேட் என்கிறார்கள். லண்டன் பிளைட் பத்தாம் கேட்டில் இருந்து லண்டன் போகும் எமிரேட் விமானம் புறப்பட்டது. இந்த முறை நல்ல வேளையாக ஜன்னல் சீட். அடுத்த சீட்டில் ஒரு வெள்ளைக்கார பெண். அவளுக்கும் அடுத்தது ஒரு வெள்ளைக்கார குண்டு மாமி. ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும். பிளேன் பெண் கொடுத்த ஓசி 'தண்ணிய ' புல்லா ஏத்திக்கொண்டு தன இரண்டு காலையும் ஏறக்குறைய ஐயப்பன் சாமி போல வைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள் .அடிப்பாவி உங்கள் பண்பாடு இவ்வளவு தானா என்று நினைப்பதற்குள் அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியம் செய்தாள். திடீரென்று கண் விழித்தவள் சடார் என்று தன்னுடைய சீட்டின் மேல் ஏறி அடுத்த சீட்டை டமால் என்று தாண்டி வழியில் குதித்தாள். பாத்ரூம் போய்விட்டு வந்து மீண்டும் அதுபோலவே பக்கத்து சீட்டின் கைபிடியின் மேலேறி தூங்கும் பெண்ணைத்தாண்டி தன சீட்டில் மீண்டும் ஐயப்பன் போஸ். பகலா ராத்திரியா என்று குழப்பம் ஏற்படும் போது பிளேன் லண்டன் கேட்விக் தளத்தில் இறங்கியது. ஏழு எட்டு இந்திய முகங்கள் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டு நிற்பதைப்பார்த்தேன் ' இது தாண்டா நம் குரூப்'.டிராவல் காரரின் ஆள் வந்து எங்களை ஒரு அருமையான ஏசி பஸ்ஸில் அழைத்து கொண்டு ஹோட்டலுக்குச்சென்றார் அடுத்த நாள் ப்ரோகிராம் சிக்ஸ் , செவென் , எய்ட் என்றார். அப்படியென்றால் காலை ஆறு மணிக்கு எழுந்து , ஏழு மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என்று அர்த்தம். ஏறக்குறைய அடுத்த பன்னிரண்டு நாட்களும் இது தான் டைம் டேபிள். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஹாலிடே இன் ஹோட்டலுக்கு சென்றோம் வசதியான அறை .
                                                     
                                               நம் ஹோட்டல்
அன்றைய இரவு ஹீத்ருவில் இருக்கும் அந்த ஹோட்டலில் இரவு கழிந்தது.
....பயணம் தொடரும்