புதன், 18 ஆகஸ்ட், 2010

# 36 சாருவும் பஸ் டிரைவரும்

ரொம்ப வருஷம் முன் நான் கொஞ்ச காலம் நாகபட்டினத்தில் ஆணி புடிங்கி கொண்டு இருந்த போது வாராவாரம் திருவள்ளுவர் பஸ்ஸில் சென்னை வந்து போகவேண்டி இருந்தது. இந்த பஸ் ஒன்றில் தான் நம் கதாநாயகர் டிரைவராக இருந்தார் அவர் பெயர் ஸே...முனுசாமி என்ற கொள்வோம். இந்த முனுசாமி தன்னை வெகு உன்னதமான டிரைவர் என்று நினைத்துக்கொண்டு பஸ் ஓட்டுவார். அது என்னவோ நாகபட்டினம் போய் சேர்வதற்குள் குறைந்தது ஒரு இருவதுபேராவது நிச்சயமாக முனுசாமியுடன் சண்டை போடுவார்கள். அதில் ஒன்றிரண்டு பேர் சட்டையை பிடித்து அடிக்கும் அளவுக்கு போவார்கள்.
" யோவ் இவ்வளவு மெதுவா போனா எப்ப வீடு போய் சேர்றது? சீக்கிரமா போய்யா" என்று ஒரு பெரிசு ஆட்டத்தை தொடக்கி வைக்கும். நம் முனுசாமிக்கு கோபம் பொத்து கொண்டு வரும் " எங்களுக்கு எல்லாம் தெரியும் நீ மூடிகினு கெட" என்று மறு மொழி வரும்.
'தோ பார்ரா பைலட்டுக்கு கோவம் வருது... " ஒரு பயணியின் கமென்ட். கடுப்பான முன்ஸ் திடீரென்று படு வேகமாக ஓட்டுவார். லேப்ட்டில் போய் ஒரு சைக்கிளை மோதுவது போல் போய் சடாரென்று ரைட்டில் ஒடித்து பீதியை கிளப்புவார். இதற்குள் தெருவிலிருந்து ஒரு பத்து பேராவது முனுசாமியை திட்டி தீர்ப்பார்கள்.... ஒன்றிரண்டு வாகன ஓட்டிகள் பஸ்ஸை ஓவர் டேக் செய்து பஸ்ஸை மறித்து முன்சை திட்டி தீர்ப்பார்கள். பஸ்ஸில் உள்ளவர்கள் குஷியாவார்கள்.
"யோவ் டிரைவர் நாங்க என்ன வீட்டுக்கு போவதா இல்ல ஆஸ்பத்திரிக்கு போவதா" என்று கடுப்பு ஏத்துவார்கள். முன்சுக்கு பிபி எகிறிவிடும். பஸ்ஸை ஓரம்கட்டிவிட்டு, காக்கி போட்ட கௌதம புத்தர்போல அமைதி காப்பார். பயணிகளில் ஒருவருக்காவது மூக்கை தாண்டி கோவம் வந்து உரத்த குரலில் கத்துவார். நம் முன்ஸ்.. கண்ணை மூடி அமைதி காப்பார். " அண்ணன் தூங்கறார் சத்தம் போடாதீங்கப்பா" என்று ஒருவர் தூண்டிவிட. மற்றொருவர் முன்சை உலுக்கி 'எழுப்புவார்' . அடுத்தவர் கை தன் மேல் பட்டவுடன் முனுஸ் கோபக்கண்ணகி போல் எழுந்து நின்று கூவுவார் . பஸ்ஸில் உள்ளவர்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக சரமாரியாக திட்டி தீர்ப்பார். பஸ்ஸில் குறைந்த பட்சம் ஒருவராவது 'டென்ஷன் பார்ட்டி' இருப்பார். இவர் டிரைவரை அடிக்கப்போக... "உடுப்பா"... "உடுப்பா" என்று சிலர் சமாதான கொடியாட்ட ...முன்ஸ் திட்டியபடி பஸ்ஸை எடுப்பார்.
ஐந்து ஸ்டாப் தாண்டி ஏறிய புதிய ஒருவர் சொல்வார் " டிரைவர் கொஞ்சம் வேக மாக போங்க...."
இது ஒருமுறை அல்ல பல பற்பல முறை பார்த்த நிகழ்வு.
"இந்த டிரைவருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு ராசி" என்று நான் வியந்தது உண்டு.
பதிவுலகத்திற்கு நான் வந்து சில மாதங்களே ஆகின்றன. சாரு மீது வீசப்படும் விமரிசனங்களை பார்க்கும் போது எனக்கு டிரைவர் முனுசாமி தான் நினைவிற்கு வருகிறார். சாரு மட்டும் எதை எழுதினாலும், எந்த டீவீயில் வந்தாலும் குறைந்த பட்சம் இருபது பேர் தங்கள் பிளாக்குகளில் திட்டி ரொம்ப ஓவராக தீர்கிறார்கள். இவர்களுக்கும் சாருவிற்கும் ஏதாவது வரப்பு தகராறு இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனாலும் ஆளுக்கு ஆள் சாத்தும்படி இவர் என்ன செய்தார் என்று புரியவில்லை. அடிக்கடி 'தான் எழுதுவதை நிறுத்தினால் இலக்கியத்தாய் தூக்கு போட்டுக்கொள்வாள் என்ற ரீதியில் இவர் எழுதுவது ரொம்ப ஓவராக இருந்தாலும் அதற்காக இப்படியா?
"பரவயில்லபா டிரைவர இப்படி திட்டினால் அவர் எப்படி பஸ் ஓட்டுவார்? ....நீ ஓட்டி பாருய்யா எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்" என்று முனுசாமியை 'ஏத்தி' விடுவது போல் இங்கேயும் சிலர் சாருவை ஏத்தி விடுகிறார்கள் " உங்கள் எழுத்தை படித்தால்தான்..தூக்கம் வரும்.. சாப்பாடு இறங்கும்.. உங்கள் முகத்தை பார்க்காமல் என் மூச்சு நிற்கிறது " இந்த ரீதியில் எழுதுகிறார்கள் ... . அவரும் முனுசாமி கணக்காக இடதுசாரி வலதுசாரியாக பஸ்ஸை ஓட்டி பலரிடமும் வாங்கி கட்டிகொள்கிறார்.
எனக்கு முனுசாமி பஸ்ஸில் போவதும் பிடிக்கும்... சாருவின் பிளாக்கையும் சாருவை பற்றின பிளாக்கு களும் பிடிக்கும்.

2 கருத்துகள்: