வியாழன், 27 மே, 2010

#22 ஹைரோப்பா [லண்டன் பார்க்கலாமா? ]

நான் முன்பே சொல்லியிருந்தபடி , என்னுடைய வகுப்புகளை தவிர்த்துவிட்டு ஊர் சுற்றிப்பார்த்ததை இப்போது பார்ப்போம்.
அடுத்த நாள் காலை 'வெள்ளைக்கார' பிரேக் பாச்டுடன் தொடங்கியது. நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ஏழு மணிக்கு அனைவரும் கூடினோம். பிரட், பிஸ்கட், ஜாம், கார்ன் பிளேக்ஸ், பால், இவற்றுடன் , அப்பளம் போன்ற மாமிச துண்டுகள். நமக்கு எதைப்பார்த்தாலும் அசைவமாகவே தெரிகின்றது. தக்காளி முதல் மாம்பழம் வரை எல்லாமே மாமிசத்தை நறுக்கி வைத்தது போல் தெரிகிறது. பிஸ்கட்டில் , பிரட்டில் முட்டை சேர்த்து இருப்பானோ? இரண்டு வாழை பழம் ஒரு கப் காப்பி யுடன் பிரேக் பாஸ்ட் முடிந்தது. இதே தான் அடுத்த பதினைந்து நாட்களுக்கும் பிரேக்பாஸ்ட் என்பது அப்போது தெரியவில்லை
எங்களுடைய மினி பஸ்ஸில் விண்டோ சீட் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். டூர் மேனேஜர் சுனில் என்ற கோவா பையன் தான். இவன் லண்டனிலேயே மூன்று வருஷமாக இருக்கிறானாம். அப்பொழுது தான் என் கமிரா மெமோரி கார்ட் கடைசி மூச்சு விட காத்திரு ப்பது நினைவிற்கு வந்தது. 'ஒரு மெமோரி கார்ட் வாங்க வேண்டும்'. நான் வைத்திருக்கும் அரதப்பழசான காமிராவிற்கு சென்னையிலேயே கார்ட் கிடைக்க வில்லையே, லண்டனில் கிடைக்குமா? எட்டுமணிக்கு பஸ் கிளம்பியது. லண்டன் ஒண்ணும் சுவர்க்கம் போலெல்லாம் இல்லை. நம்ப கூடுவாஞ்சேரி , வண்டலூர் மாதிரி தான் இருந்தது. என்ன தெருவெல்லாம் முழுக்க தார் போட்டு இருக்கான். வீடெல்லாம் ஒட்டு வீடுதான். ஒரு அரை மணி போனதும்
காட்சிகள் மாறின. இப்போது லண்டன் நகரத்துக்குள் வந்து இருக்கிறோம் , முதலில் பார்த்ததெல்லாம் out skirts என்று தெரிந்தது. மெயின் ரோடுகளை தவிர மற்ற ரோடுகள் எல்லாம் ரொம்ப குறுகல். போதா குறைக்கு கார் களை வேற தெரு ஓரத்தில் பார்க் செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் சுத்தமான ஆர்மேனியன் அங்கப்ப ..[ஜாதி]...தெருக்கள் தான் நினைவிற்கு வந்தன. இப்பொழுது ஒரு பாட்டியம்மாள் எங்களுடன் சேர்ந்து கொண்டாள் அவள் தான் கைடு, பெயர் சூசன். இப்பொழுது லண்டன் guided tour ஆரம்பமாகிறது என்று சொல்லி எங்கள் டூர் மனஜெர் அபீட் ஆனான்.
 பால் கதீட்ரல்
கைடட் டூர் என்பது ஒரு உலக மகா பிராட் என்பது புரிய ஆரம்பித்தது. சூசன் தெருபெரெல்லாம் சொல்லிக்கொண்டே  வந்தாள் பஸ் எங்கும் நிற்காமல் போய்கொண்டே இருந்தது. இடது பக்கம் பாருங்கள் பிகாடில்லி சர்கஸ், வலது பக்கம் இந்தியன் ஹௌஸ் நாம் திரும்பிபாற்பதர்க்குள் பஸ் அடுத்த இடத்திற்குப்போய் விடுகிறது. ஏதாவது ஒரு இடத்தை போட்டோ பிடிக்கலாம் என்று பார்த்தால் உடன் வரும் மக்கள் ஜன்னலை மொய்த்து கொண்டு விடுகிறார்கள். நமக்கு அவர்களது அழகான தலைகள் தான் தெரிகின்றன.
இப்படியே ஒப்பேத்திக்கொண்டு ஒரு இடத்துக்கு வந்தோம். இங்கு இடது பக்கம் இருப்பது தான் லக்ஷ்மி மிட்டல் வீடு என்று சொன்னாள் சூசன். நிறைவாக இருந்தது. நம்மூரக்காரன் இந்த ஊரில் வந்து பெரிய லெவலில் வாழ்வது நன்றாக இருந்தாலும், இந்த ஆள் நாம் ஊர்காக பெரிசா ஒண்ணும் பண்ணலையே, நாம் தான் இவனை சொந்தம் கொண்டாடுகிறோமோ என்று தோன்றியது.
லண்டனில் உள்ள ஒரு பெரிய சர்ச்க்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கே போட்டோ பிடித்துக்கொண்டோம். அங்குள்ள பாத்ரூம் பைசா போட்டால்தான் திறக்கிறது (ஏறக்குறைய 30 ரூபாய்) டூர் மானேஜர், நாம் அடுத்தது போகப்போகும் பக்கிகாம் அரண்மனையில் ப்ரீ பாத்ரூம் வசதி இருக்கும் என்று ஆறுதல் சொன்னான்.

பிக்கடில்லி சர்கஸ்


பக்கிங் ஹாம் அரண்மனை

     அடுத்தது நாம் போனது பக்கிங் ஹாம் அரண்மனை. பக்கிங் ஹாம்  அரண்மனை விசிட் ஒரு பெரிய ஏமாற்றம் . நம்மை அனுமதிப்பது ஒரு பெரிய மூடப்பட்ட கேட்டைப்பார்க்கத்தான். அதன் வாசலில் சில சிவப்பு டிரஸ் போட்ட குதிரை வீரர்கள். அரண்மனையின் மூடப்பட்ட கதவை தரிசித்துவிட்டு போட்டோக்களை வீறு பிடித்துக்கொண்டு வந்தோம். இது ராஜ விசுவாசமா அடிமை தனமா என்று புரியவில்லை.(நானும் போட்டோ எடுத்துக்கொண்டது வேறு விஷயம்)
டவர் ஆப் லண்டன்  என்று ஒரு இடம் இருக்கிறது. தேம்ஸ் நதி  கரையில் அமைந்த இந்த இடம் இப்போது பொருட்காட்சியகமாக இருக்கிறது. எல்லா இடத்திலும் பெரிய கியூ. டூர் மானேஜர் சொன்ன படி நம்மூர் கோஹினூர் வைரம் வைக்கப்பட்டிருந்த jewelHouse   பார்வையிட கியூவில் நின்றேன். அங்கேயும் நம்மூர் வாசிகள் சினிமா தியேட்டர் கியூவில் போல 'பூந்து' போவதை பார்க்க முடிந்தது. ஓரிடத்தில் நிறைய கிரீடங்களை கண்ணாடி ப்பெட்டிகளில் வைத்து இருக்கிறார்கள். இவை  ராஜாக்களும் ராணிகளும் அணிந்த கிரீடம்களாம் இதில் ஒன்றில்தான் நம்மூர் கோஹினூர் வைரம் பதித்து இருக்கிறது. இங்கு தானே நகரும் கன்வேயர் பெல்டில் நாம் நின்றால் நம்மை நகர்த்தி எல்லா கிரீடங்களையும் பார்க்கும்படி செய்கிறது. கோஹினூர் நிஜமாலுமே பெரிய பாக்கு சைஸ் இருக்கிறது. " இந்த கோஹினூர் இங்க வந்தபோது இந்தியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீ லங்கா  எல்லாம் சேர்ந்து இருந்தது. இப்போது யாரிடம் திருப்பிக்கொடுப்பது. இதனால்தான் இதை நாங்களே வைத்துக்கொண்டு இருக்கிறோம். என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்தாள்" சூசன்.

......இன்னும் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக